Problems in Teaching History in a Rural University (Tamil)
புழக்கடைக்குத் தள்ளப்படும் வரலாற்றுக் கல்வி: அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு சமூகம் ஆரோக்கியமான, முழுமையான வளர்ச்சியை எட்டுமா?
புழக்கடைக்குத் தள்ளப்படும் வரலாற்றுக் கல்வி: அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு சமூகம் ஆரோக்கியமான, முழுமையான வளர்ச்சியை எட்டுமா?
- வினோத் வின்சென்ட் ராஜேஷ்
Vinod Vincent Rajesh
Assistant Professor of History
Manonmaniam Sundaranar University
Tirunelveli
Vinod Vincent Rajesh
Assistant Professor of History
Manonmaniam Sundaranar University
Tirunelveli
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பற்றிய ஒரு உரை அரங்கில் அந்த இலங்கைத் தமிழ் நண்பருடன் அமர்ந்திருந்தேன். அந்த இலங்கை நண்பரின் கண்களில் பிரமிப்பையும் சோகத்தையும் கண்டேன். ”இந்திய நாட்டின் ஒருமைப்பாடு சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று நினைவுகளால் நுணுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. எங்கள் நாட்டில் அத்தகைய வரலாற்றுச் செறிவு இல்லாததுதான் இனப்போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது என கருதுகிறேன்” என்று அவர் கூறினார். வரலாறு என்பது மக்கள் வாழ்க்கையோடும் தேசிய அடையாளத்தோடும் உலக ஒட்டத்தோடும் நெருங்கியத் தொடர்பு கொண்டது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்ட வரலாற்றுக் கல்வி சமகால இந்தியாவில் மிகச் சிறிய முக்கியத்துவத்தையே பெறுகிறது. பக்குவத்துடனும், தெளிவுடனும் பயில வேண்டிய வரலாற்றுக் கல்வி, பிற பாடங்களில் இடம் கிடைக்காதவர்கள் தேர்வு செய்யும் பாடமாக இருப்பது துரதிருஷ்டவசமானது.
இந்திய நாட்டில் உயர்கல்விக்கான முன்னுரிமையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. அறிவியல் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சமூக அறிவியலுக்கு வழங்கப்படுவதில்லை. இதை உலகமயமாக்கலின் விளைவு என்று வர்ணிப்பது வழக்கம். ஆனால் 1980களிலேயே சமூக அறிவியல் கற்பதை புறக்கணிக்கும் போக்கு தொடங்கிவிட்டது. அறிவியல் கல்வி பயனுள்ளது வரலாறு உள்ளிட்ட சமூக அறிவியல் கல்வி பயனற்றது என்ற நேரெதிர் மனோபாவம் சமூகப் பார்வையாகவே மாறி வருகிறது. இந்த மோசமான போக்கு தொடங்கியதில் அரசாங்கத்தைவிட சமூகத்தின் பங்கு அதிகமாகும்.
வரலாற்றுப் பாடம் எப்படி புரிந்துக் கொள்ளப்படுகிறது, அதை முறையாக கற்றுக் கொள்பவர்கள் எவ்விதமான பயிற்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்? குறிப்பாக பல்கலைகழக அளவில் அதன் நிலையென்ன? வரலாற்றுப் பாடம் மழலையர் பள்ளிகளில் துவங்கி பல்கலைகழகம் வரை கற்பிக்கப்பட்டாலும், அதைப்பற்றியான புரிதல் சில தவறான வரையரைகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. குறிப்பாக வரலாறு கற்பதால் எந்தப்பயனும் இல்லை என்பதும், அதில் ஆழமாக படிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதும் பொதுப் புத்தியில் உறைந்து போன தவறான எண்ணங்கள். வரலாறு கற்பது பயனுடையதுதானா என்று பொதுப் புத்தியில் படிந்திருக்கும் கேள்வியை எதிர்கொள்ள வேண்டுமானால், இந்த சமூகத்தின் சமகால மதிப்பீடுகள் என்ன என்பதைக் காண வேண்டியிருக்கிறது.
கல்வி என்பது வேலைக்குச் செல்வதற்கான ஒரு கருவி என்றே இன்றைய சமூகம் பெருமளவில் கருதுவதால் வரலாறு படிப்பதால் என்ன வேலை கிடைக்கும் என்று கேள்வி கேட்கிறார்கள். மழலையர் பள்ளியில் துவங்கி நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரலாற்றுப் பாடம் கட்டாயமாக போதிக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றைக் கற்கும் ஆர்வம் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது. குழந்தைகளின் மனதில் எதிர்காலம் குறித்த பிம்பம் ஆழமாகப் பதியும் இந்த இளம் வயதில் பெற்றோர் விதைப்பதெல்லாம் டாக்டர், எஞ்சினியர், பைலட் கனவுகள்தான். இந்நிலையில் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் எந்த மாணவனும் வரலாற்றுப் பாடத்தின் மேல் காதலாலாலோ, வாஞ்சையாலோ அதை படிக்க வருவதில்லை. எந்த பாடத்திலும் மதிப்பெண் பெற முடியாதவர்கள், ஏதோ ஒரு பட்டத்திற்காக விண்ணப்பித்து அங்கே இடம் தீர்ந்துவிட்ட பட்சத்தில் எந்தப் பாடத்தையாவது தேர்வு செய்யும் நிர்பந்தத்தில் இருப்பவர்களே பிரதானமாக வரலாற்றுப் பாடத்தை கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். குறைந்த மதிப்பெண் எடுத்து தாழ்வு மனப்பான்மையில் சருங்கிக் கிடக்கும் மாணவர்களின் புகலிடமாகவே பெரும்பான்மையான வரலாற்றுத்துறைகள் திகழ்கின்றன. இவ்வாறு வரலாறு கற்க வரும் மாணவர்கள் அதிகமானோர் தாய்மொழி வாயிலாக கற்றவர்கள் என்பது கல்வியில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உணர்த்துகிறது. வரலாறு கற்பவர்களில் சற்று விழிப்போடு முனைபவர்கள் அதிகபட்சமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களாவதைத் தாண்டி இந்தத் தலைமுறையினருக்கு வேறு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற உண்மையை நான் இங்கு மறைக்க விரும்பவில்லை. ஆனால் வேலை வாய்ப்பைத் தாண்டி வரலாற்றுக்கு ஒரு சமூகத்திலிருக்கும் பங்கினை மறுக்க முடியாது என்பதே எனது வாதம்.
கடந்த தலைமுறையில் வரலாறு கற்றவர்கள் குடிமையியல் தேர்வுகளை மனதில் கொண்டு படித்தார்கள். ஒருவேளை அந்த முயற்சியில் தோற்கும் பட்சத்தில் வேறு ஏதாவது ஒரு போட்டித் தேர்வில் சுலபமாக வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொருப் போட்டித் தேர்வுக்குமான யுக்தி பெரிதும் மாறுபடுவதாலும், அறிவியல் பாடம் படித்தவர்கள் அதிக அளவில் இந்தக் களத்திலும் போட்டியிடுவதாலும் வரலாற்று மாணவர்களுக்குப் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாறு கற்கும் மாணவர்களே தாங்கள் கற்கும் கல்வியால் எந்தப் பயனும் இல்லை என்ற மனோபாவத்திற்கும், விரக்தி நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
எதையும் பொருள் சிந்தனையோடு இணைத்துப் பார்கின்றத் தன்மையும் அறிவுத் தேடலை வேண்டாத வேலை என்று நினைப்பதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்குறிய பண்பல்ல. அதேபோல அறிவுத் தேடலின் இறங்குபவர்கள் அதன் ஆழத்தை அளந்துப் பார்க்காமல், மேலோட்டமாக கற்பதில் ஒரு நன்மையும் இல்லை. மேலோட்டமான அறிவுத் தேடல் பரந்துப்பட்ட பார்வையை ஏற்படுத்தாது. ஒரு சமூகத்தில் தொழில்நுட்பம் வளர்வதோடு இணைந்து சமூக அறிவியலும் வளர வேண்டியது இன்றியமையாததாகும். பின்னதின் மூலம் மக்களை வழிகாட்டி நடத்தக்கூடிய சிந்தனையாற்றல் ஒரு சமூகத்திற்குக் கிடைக்கும். அந்த வளர்ச்சி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதன் பலன்களையும் பக்குவத்தோடு அணுகுவதற்கு கற்றுக் கொடுக்கும். தொழில் நுட்பத்தின் ஒரு தலைபட்சமான வளர்ச்சி செல்வத்தை உருவாக்கிடலாம்; லெளகீக வசதிகளை உருவாக்கிடலாம். ஆனால் கலாசாரத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கு அது மட்டுமே உதவாது. அறிவியலையும் அதன் தொடர்ச்சியான தொழில்நுட்பத்தையும் மட்டுமே தனது மைய அச்சாகக் கொண்ட ஒரு சமூகம் பெரும் அழிவின் பாதையில்தான் செல்ல முடியும். இதை தெரிந்து வைத்திருப்பதால்தான் விவரமறிந்த அரசாங்கங்கள் சமூக அறிவியல் புலத்தில் தேர்ந்தவர்களை வழிகாட்டியாக வைத்துக் கொள்கின்றன. எனினும் இந்தத் தலைமுறை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சமூக அறிவியல்-வரலாறு குறித்த அறியாமை தொடர்கிறது.
வரலாற்றுக் கல்விக்கு சமூகத்தில் உரிய இடத்தைக் கொடுப்பதற்கு பதில் இப்போது ஒரு வினோதம் அரங்கேற்றப்படுகிறது. வரலாற்றுப் பாடத்துடன் சுற்றுலா கல்வியை இணைப்பதன் மூலம் கல்வியிலுள்ள பிரச்சனைகளை சீர் செய்துவிட முடியும் என்று அதிமேதாவித்தனமாக யோசிக்கிறார்கள். வரலாற்றுப் பாடத்தோடு சுற்றுலா பாடம் படிப்பது தவறில்லை. ஆனால் வரலாற்றுப் பாடத்தின் வகைமைகளை குறைத்து அந்த இடத்தில் சுற்றுலா பாடத்தை நிரப்புவது சரியல்ல. சுற்றுலா பாடத்தை ஒரு சமூக அறிவியல் புலமாக முழுமையாக கற்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் சுற்றுலா கல்வி வரலாறு கற்பவர்களுக்கு வேலை வாய்ப்பை தேடித் தரும் என்ற வாதத்தை முன்வைத்து வரலாற்றுக் கல்வியை சமரசம் செய்துகொள்வது ஏற்புடையதல்ல.
தமிழ் வழிக் கல்வி மூலமாக படித்தவர்களே உயர் கல்வியில் வரலாற்றை அதிகம் தேர்ந்தெடுப்பது மற்றொரு பிரச்சனைக்கும் வித்திடுகிறது. வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டாலும் அவர்கள் படிப்பதும் எழுதுவதும் பெரும்பான்மையாக தமிழ்மொழியில்தான். ஆங்கிலத்தில் முயன்று எழுதும் சிலரின் புலமையும் பெருமைப்படும் அளவுக்கு சிறப்பானதல்ல. ஆனால் வரலாற்றுத் துறையின் சிறந்த, முழுமையான, சமீபத்திய நூல்கள் எல்லாம் ஆங்கில மொழியில்தான் வெளியிடப்படுகின்றன. அவையெல்லாம் உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதும் இல்லை. இதனால் தாய்மொழிக் கல்வியை தேர்ந்தெடுத்தவர்கள் தகவலடிப்படையில் பின்தங்கிவிடுகிறார்கள். அவர்கள் பெறும் கல்வி ஒப்பீட்டளவில் ஆழமானதாக இருப்பதில்லை.
ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருக்கிறதோ அந்த அளவிற்கு வரலாற்றை அவரால் ஆழமாகவும் நுட்பமாகவும் புரிந்துகொள்ள முடியும். ஆய்வு நோக்கத்திற்காகவும் வசதிக்காகவும் பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, நவீன வரலாறு, தற்கால வரலாறு என்று வரலாறு பல பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றை தன் விருப்பமான பகுதியாக தேர்வு செய்யும் ஒரு மாணவன் அதற்கேற்றாற் போன்ற ஒரு மொழியை கற்பது அவசியமாகும். ஆனால் ஆங்கிலம், இந்தி போன்ற வேற்று மொழிகளை கற்பது மாநில அரசின் கொள்கைக்கு எதிரானது என இன்றும்கூட பல ஆசிரியர்கள் நம்புகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. உச்சக்கட்ட ஆய்வுகளில் ஈடுபடுகிறவர்களில்கூட பலர் வேற்று மொழிகளை தெரிந்துகொள்ள ஈடுபாடு காட்டுவதில்லை.
ஆசிரியர்கள்கூட வகுப்பறையை புதுத் தகவல்கள், கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலும், வரைவியல்--------- கண்ணோட்டத்திலும் (historiographical perspective) கொண்டு செல்கிறார்களா என்பது சந்தேகம்தான். அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பணிக்காலத்தில் சில புத்தாக்க பயிற்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதை பல்கலைக்கழக மானியக்குழு கட்டாயமாக்கியிருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தாங்கள் நடத்தக்கூடிய பாடத்தில் புதிதாக தெரிய வந்துள்ள விஷயங்களை அறிந்துகொள்கிறார்கள். எனினும் அவற்றை வகுப்பறையில் போதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. சராசரியான மாணவன் வரலாற்றை தேதிகளின் அடிப்படையில் உருவாகும் சம்பவங்களின் தொகுப்பாகவே புரிந்து வைத்திருக்கிறான். பள்ளி பருவத்தில் அவன் மனதில் இந்தப் பார்வையே அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. அவனிடம் கோட்பாட்டின் அடிப்படையில் வரலாற்றை எடுத்துச் செல்வதென்பது, மூளைச்சலவை செய்யப்பட்டது போல பதிந்து போன பழைய புரிதலை நீக்கிவிட்டு செய்ய வேண்டிய கடினமான காரியமாகிறது. அதில் ஆசிரியர் முழுமையான வெற்றியைப் பெற்றுவிடுவதில்லை.
பல்கலைகழக மானியக்குழுவிலிருந்து மத்திய மற்றும் மாநில பணிகளுக்கான தேர்வாணையம் வரை அனைத்து அமைப்புகளும் தங்கள் தேர்வுகளின் ஒரு பகுதியாக கொள்குறி வகை வினாக்களை (Objective Type questions)கொண்டு நடத்துகின்றன (பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய தேர்வாணையம் போன்றவை தாங்கள் நடத்தும் தேர்வு முறைகளில் இப்போது சில சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன). இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஆசிரியரும் மாணவரும் வகுப்பறையில் வரலாற்றுக் கல்வியின் நேரெதிர் நோக்கங்களுடன் போராட வேண்டியிருக்கிறது. வரலாற்றின் ஆழமான புரிதல் நோக்கி மாணவனை அழைத்துச் செல்லும் ஆசிரியரின் முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்வத்தில் புத்திசாலியான மாணவன் கூடத் தடுமாறுகிறான். ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையில் ஏற்படக்கூடிய இந்த பரிவர்த்தனையின் சிக்கல்களால் ஆசிரியரை மாணவன் குறைத்து மதிப்பிடுகிறான். அவனிடமிருந்து ஆசிரியர் எதிர்பார்த்த பலன் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அதனால் ஆசிரியர் தன் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மாணவனின் நிலைக்கே இறங்கிவிடும் நிலை உருவாகிறது.
மாணவனின் தேவை அதிக மதிப்பெண் பெறுவது தானேயொழிய புதிய முயற்சிகளை வரவேற்று அதற்கேற்றாற் போல் தன்னை வடிவமைத்துக்கொள்வதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதில் மாணவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. நமது சமூகமும் பள்ளிக் கல்வியும் அவர்களை சரியான விதத்தில் உயர் கல்விக்கு தயார் செய்து அனுப்புவதில்லை. இந்த நிலை குறிப்பாக தமிழகத்தில் பரவியுள்ளதற்கு சிலக் காரணங்கள் உள்ளன. சிறந்த வரலாற்றாய்வாளர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பான பாடத் திட்டத்தைக் கொண்ட மத்திய அரசின் கல்வி முறையை (சி.பி.எஸ்.இ) பின்பற்றக்கூடிய பள்ளிகள் தமிழகத்தில் சொற்பமாகவே உள்ளன. மத்தியப்பள்ளிகளில் விநியோகிக்கப்படும் வரலாற்று நூல்கள் சிறந்த நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால், மிக எளிமையான வடிவில் எழுதப்படுகின்றன. அவற்றை பள்ளிகளுக்கு வெளியிலும் அரசு பிரபலப்படுத்தி பரவச் வழிசெய்கிறது. குடிமையியல் தேர்வுக்குக்கூட இப்புதகங்கள் நுழைவாயிலாக திகழ்கின்றன என்பது அவற்றின் தரத்திற்குச் சான்று. தமிழகத்திலும் நிபுணர் குழுக்களின் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்தான் வரலாற்று நூல்களை எழுதுகிறார்கள் என்றாலும் சி.பி.எஸ்.இயின் வரலாற்று நூல்களோடு அவற்றை ஒப்பிடவே முடியாது என்பது நடைமுறையில் இங்குள்ள பிரச்சனைகளைக் காட்டுகிறது. மத்திய அளவிலோ வரலாற்று மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்கள் இளநிலை, முதுநிலை பட்டத்திற்குத் தேவையான பாடப் புத்தகங்களை தயார் செய்கின்றன.
தரமான வரலாற்று நூலிலிலும் கல்வியிலும் ஈடுபாட்டுடன் மூழ்குபவர்கள் நாளடைவில் சில ஆய்வுக் கேள்விகளை எழுப்பும் பக்குவத்தை தம்முள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அக்கேள்விகளுக்கு பதில் தேடும் பணியை தங்களது முனைவர் பட்டத்திற்கான தேடலாகவும், உழைப்பாகவும் மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கும் மேலாக ஒவ்வொரு நாடும் தன் வரலாற்றை சொல்வதற்கு எண்ணற்ற முறைகளை கடைப்பிடிப்பதையும், அவற்றோடு சிந்தனை அடிப்படையில் தாங்கள் நடத்த வேண்டிய உரையாடலின் மூலம் தங்கள் நாட்டிற்கான சிறந்த வரைவு முறையை (historiographical style) தேர்ந்தெடுக்க வேண்டிய கடமையையும் உணருகிறார்கள். இவையாவும் தமிழகத்தில் வரலாறு படிக்கும் மாணவர்களிடம் ஏற்படாமலே போய்விடுகிறது. பல நேரங்களில், ஆய்வுப் பட்டத்திற்கு உழைக்கும் மாணவர்கள் கூட அவர்கள் ஆய்விற்கு உட்பட்ட அடிப்படை நூல்களையும், அவை எழுப்பும் மேலோட்டமான கேள்விகளையும்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. முனைவர் பட்டத்திற்காக நடக்கும் வாய்மொழித் தேர்வின் போது, இந்தக் குறைகளை தேர்வு நடத்துபவரும், தேர்வில் கலந்து கொள்பவர்களும் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அவற்றை சீர்செய்து கொள்ளும்படி பணிக்கிறார்கள். அதோடு ஆய்வுக் கேள்விகள் முடிவடைந்துவிடுகின்றன.
இத்தகைய ஆய்வுகளால் எந்தவிதமான சமூகப்பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சில கேள்விகள்தான் எழுகின்றன. இன்று முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பேராசிரியராக தகுதிப் பெற்றவராகிறார். ஆனால் முனைவர் பட்டம் பெறக்கூடியவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேர்வுகளில் தேறமுடியாதவர்களாத் தான் உள்ளனர். இந்தத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், வரலாற்றுப் பாடத்தின் அடிப்படையை மட்டுமே சோதிக்கின்ற வகையில் தான் அமைகின்றன. அதிலும் குறிப்பாக கேள்விகள் தொன்னூறு சதவிகிதம் இந்திய வரலாற்றை மையமாக கொண்டவை. கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படுகின்றன. கொள்குறி (Objective type) வகை வினாக்களாலும், விரிவான பதில் எழுதக்கோறும் வினாக்களாலும், தேர்வுத்தாள் உருவாக்கப்படுகிறது. விரிவான விடை ஆங்கிலத்திலேயே எழுத கோரப்படுகிறது. தமிழில் எழுதுவதற்கான ஸ்லெட் தேர்வுகளை நடத்த எந்த அக்கறையும் காட்டப்படவில்லை.
மேலும் ஒவ்வொரு பதிலும் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. அதிலிருந்து கூடுதலோ, குறைதலோ கூடாது. அதைப்போல கேள்வியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான விவரி, ஆய்க, விசாரணை செய், மதிப்பீடு செய், திறனறி போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. மாணவன் எப்படிக் கேட்டாலும் ஒரே மாதிரியான பதிலை எழுதியே பழகிவிடுகிறான். இது பாடத்தில் அவனுக்கு புரிதல் இல்லை என்பதையும், மனப்பாடம் மட்டுமே செய்கிறான் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேர்வுகளில் இவையெல்லாம் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அவர்கள் விடை திருத்தும் முறையில் ஒரு நேர்மையான நெறிமுறையை கடைபிடிக்கும் வகையில், திருத்துபவரிடம் விடைதாளை முழுவதுமாக ஒப்படைக்காமல் ஒரு பதிலை மட்டுமே திருத்திப் பெறுகிறார்கள். அந்த விடை திருத்துபவர் எல்லாத் தாள்களிலும் குறிப்பிட்ட ஒரு விடையை மட்டுமே திருத்துகிறார். அதன் மூலம் தேர்வு எழுதிய அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுகோல ஏற்படுத்த முடிகிறது. இந்த முறையில் தேர்வு எழுதுவதற்கு நுண்ணிறிவும், சரியான எழுதும் அணுகுமுறையும் கட்டாயம் தேவை.
பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேர்வுகளையும் முனைவர் பட்டத்தையும் ஒப்பிடும் போது முன்னதே சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறது முங்கேக்கர் குழுவின் பரிந்துரை. அதிலும் வரலாற்று மாணவர்கள் வெறும் தேர்வுக் கண்ணோட்டத்தோடு படிப்பதற்கு அவர்கள் படிக்காமலே இருக்கலாம். சமூகத்தில் மாறிப் போன மதிப்பீடுகளால் வரலாறை படிக்க வரும் மாணவன் மீது சமூகம் பரிதாபப்படுகிறது. படிக்கும் மாணவர்களிலும் பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களால் ஊன்றிப் படிப்பதில்லை என்பதால் அதே பரிதாபத்தின் அடிப்படையில் மாணவனுக்கு மதிப்பெண்களும் பட்டமும் ’போட்டு’ அனுப்பப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்க வேண்டிய வரலாற்றுக் கல்வி வெறும் காகிதங்களை சான்றிதழ் என்ற பெயரில் அச்சிடுவதை முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்றையக் காலகட்டத்தில் வரலாறு படிக்க வருபவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாவர். பொருளாதாரரீதியில் ஒடுக்கப்பட்ட முதல் தலைமுறை உயர்கல்வி பயிலுனர்களும் அதில் அதிகம். குறிப்பாக பெண்களே மிகுதி.
எனினும் இன்று வேலைவாய்ப்பு விஷயத்தில் ஓரளவுக்கு நிலைமை சாதகமாக மாறியிருக்கிறது. வரலாறு கற்பவர்களுக்கு கடல்கடந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. உச்சபட்ச அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல அடித்தளம் அமைப்பதற்கேற்ற நூல்நிலையங்கள், பல்கலைக்கழகங்களின் உள்ளேயும் வெளியிலும் கிடைக்கின்றன. வகுப்பறைக்கு வெளியே கற்பதற்காக முன்பை விட அதிகமான அளவில் தேசிய, மாநில அளவிலான மாநாடுகளும் நடத்தப்படுகின்றன. கணிணி வசதியும், இணையத்தள இணைப்பும் சகஜமாகியிருக்கிறது. ஜேஸ்டோர், புரோஜக்ட் மியூஸ் போன்ற கல்விமட்டத் தேடு வலைதளங்களும், கூகுள் புத்தகம் தேடும் வலை தளமும் முன்பு கடும் சிரமத்துடன் செய்த பணிகளை எளிமையாக்கியுள்ளன. கூகுள் மொழிபெயர்ப்பு வலை தளம் பல ஜரோப்பிய மொழிகளை கற்பதை எளிமையாக்கியுள்ளது. பொருளாதார ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பல புதிய சவால்களை எதிர் கொண்டிருக்கும் மேலை நாடுகள் அவற்றுக்கு தீர்வு காண இந்திய அனுபவத்தை பயன்படுத்த முடியும் என்று நினைக்கத் துவங்கியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய கல்விச் சந்தையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கமும் அவர்களுக்கு உண்டு. அந்நாடுகள் நம் நாட்டு கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஓர் உரையாடலை துவக்க முனைகின்றன. ஆனால் நமது அறிவுத் தேடல் மரபை தொலைத்துவிட்டு, வெறும் அறிவியலுக்கான முக்கியத்துவம் மூலம் இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியாது.
கட்டுரையாளர் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்.
No comments:
Post a Comment